Thursday, May 31, 2018

கஞ்சா வியாபரத்தை தட்டி கேட்டதால் சிவகங்கையில் 3 நபர்கள் கொல்லப்பட்டார்களா? - தோழர் ஓவியா

thozhar ? ஓவியா
//சிவகெங்கை பகுதியில் கஞ்சா விற்று வந்த பிற்படுத்தப்பட்ட சாதியைத் சேர்ந்தவர்களை தட்டிக் கேட்டதற்காக தேவேந்திரகுல சாதியைச் சேர்ந்த மக்களை வெட்டியிருக்கிறார்கள் அதில் 3 உயிர்கள் பலியாகி விட்டன என்று செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் எந்த நாளிதழிலும் விரிவான தகவல்கள் இல்லை. எனவே இதனையே நம்பத்தகுந்த செய்தியாகக் கொண்டு சில விசயங்களை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். முதலாவதாக கஞ்சா விற்பதை எதிர்த்து தகராறு செய்தது என்பது  தேவேந்திர குல மக்கள்  என்பது அவர்களின் பெருமைக்குரிய செயலாகும். அது ஒரு உண்மையான சமுதாயப் போராட்டமேயாகும். அதில ஈடுபட்ட பெருமையை முன்னுக்கு நிறுத்தாமல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததால் கொலை செய்து விட்டார்கள் என்று நம் நண்பர்கள் எழுதுகிறார்கள். இது தவறு என்பதாக நான் உணர்கிறேன். ஒரு பிரச்சனையின் உண்மைத் தன்மைகளை நாம் வெளிக் கொணர வேண்டும். எழுத்து என்பது அற்புதமான செயல்பாடு. அதன் அருமை உணர்ந்து பயனபடுத்த வேண்டும். தயவுசெய்து இப்படி சொன்னதற்காக பொங்காதீர்கள். இரண்டாவது கஞ்சா விற்பவன் அதனை யார் தடுத்தாலும் இதே வன்முறையை கையாளவே செய்வான்.
 அது பொண்டாட்டி பிள்ளையாக இருந்தால் கூட செய்வான். எனவே சாதி இங்கு அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது.
ஆனால் அவனது குணத்தையும் செயலையும் சாதி மட்டும் தீர்மானிக்கவில்லை. அவன் செய்யும் தொழிலம் தீர்மானித்திருக்கிறது. இந்த உண்மையை மொத்தமாக இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். சரி. இந்த இரண்டு தவறுகளும் ஏன் நடக்கின்றன என்று பார்த்தால் அவர்களின் அடுத்த குற்றச் சாட்டில் அதற்கு பதில் இருக்கிறது. தமிழன் என்று சொன்னீர்களே என்கிறார்கள். காவிரிப் பிரச்சனையில்… தமிழன் என்று சொன்னீர்களே என்று அவர்கள் பட்டியல் நீள்கிறது.  உங்கள் உண்மையான நோக்கம்தான் என்ன…. ? நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இனம் நாடு நலியும் போது அதில் அதிகமாகப் பாதிக்கப் படுவது அங்கிருக்கும் விளிம்பு நிலை மக்களாகதான் இருப்பார்கள். ஈழத்தில் முள்வேலிக்குள் மாட்டியது யார்-? காவிரிப் படுகையில் நலிந்து மடிந்து கொண்டிருக்கும் மக்களில் பெரும்பகுதியினர் இந்த மக்களே.  சிவகெங்கையில் சாதிப் பேரைச் சொல்லி தாக்கும் போது சாதியாக பார்க்கிறோம். இந்தியாவில் தமிழர்களாக பாதிக்கப் படும்போது தமிழர் என்கின்ற பேரில் திரள வேண்டும் என்கிறோம். அதற்கு மேல் அந்த தமிழர் என்கின்ற வார்த்தையை வேறெதற்காகவும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியமில்லை. இது புரிந்தால் நல்லது. புரியாவிட்டால் நீங்கள் தமிழர் என்றே சொல்லிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு சாதியை ஒழிக்க எந்த வழி தெரியுமோ அந்த வழியில் நீங்கள் வேலை செய்யுங்கள். அநாவசியமாக காவிரிக்காக போராடுகிறவர்களை தன் நிலத்துக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை வம்புக்கிழுக்காதீர்கள். மீண்டும் மீண்டும் சாதியை உருவாக்கியவன் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறான்//
.

Saturday, May 26, 2018

அமித் ஷா - வசுந்தரா: முற்றும் மோதல்!


பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷாவுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் இடையில் நிலவும் கருத்து மோதலால், ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு கடந்த ஒன்றரை மாதங்களாகத் தலைவர் இல்லாத நிலை நிலவுகிறது.

அண்மையில் ராஜஸ்தானில் நடந்த மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக இருந்த அசோக் பர்னமி தனது பதவியை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ராஜினாமா செய்தார். இவர் முதல்வர் வசுந்தராவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அகில இந்தியத் தலைமையே இவரிடம் கட்டாய ராஜினாமா கடிதம் பெற்றதாகவும் செய்திகள் வந்தன.

இந்த நிலையில் காலியாக இருக்கும் மாநில பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தனது ஆதரவு வட்டத்தில் இருப்பவரையே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் முதல்வர் வசுந்தரா. ஆனால் அமித் ஷாவோ முதல்வருக்கு இணக்கமான ஒருவரை மாநில பாஜக தலைவராக நியமிக்க உடன்படவில்லை. இந்த கருத்து மோதலால் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் இன்று மே 28ஆம் தேதிவரை ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.

மத்திய அமைச்சரும் ஜோத்பூர் எம்.பியான கஜேந்திரா ஷேக்வாட்டை பாஜக தலைவராக்க அமித் ஷா விரும்பியபோது அவருக்கு முதல்வர் வசுந்தரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்னொரு மத்திய அமைச்சரான அர்ஜுன் மெஜ்வால் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட இருந்த நிலையில் அவருக்கும் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நியமனம் செய்யப்படவில்லை.

“மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி என்பது தனது ஆதரவாளரிடம் இருக்க முதல்வர் விரும்புகிறார். அப்போதுதான் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில்தான் செல்வாக்கு செலுத்த முடியும் என்று கருதுகிறார் வசுந்தரா. இதற்காகவே அவர் தனது ஆதரவாளரும் இப்போதைய மாநில அமைச்சருமான ஸ்ரீசந்த் கிரிப்லானியை மாநில பாஜக தலைவர் ஆக்குமாறு அகில இந்திய தலைமைக்கு பரிந்துரைத்தார்.

இவரிடம் மாநிலத் தலைவர் பதவி இருந்தால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு அதிகமாக சீட் வழங்க முடியும் என்று கணக்குப் போடுகிறார் முதல்வர் வசுந்தரா. ஆனால், இதை அமித் ஷா ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் ராஜஸ்தான் மாநிலத்துக்கு இன்னமும் மாநிலத் தலைவர் நியமிக்கப்படவில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவில் தனிப்பட்ட செல்வாக்குடன் தலைவர்கள் வளர்வதில் அமித் ஷாவுக்கு விருப்பமில்லை. எல்லா லகானும் டெல்லியிடமே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அதன் விளைவுதான் விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கும் ராஜஸ்தான் போன்ற மாநிலத்துக்கு கூட தலைவர் பதவியை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவர் பதவியை உடனடியாக நியமித்த பாஜக தலைமை ராஜஸ்தான், ஆந்திரா இரு மாநிலங்களிலும் தலைவர்களை நியமிக்க யோசித்து வருகிறது. ஆந்திராவில் பாஜக அவ்வளவு வலிமையாக இல்லை. ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும் ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் அமித் ஷாவுக்குமான மோதல் முற்றி வருவதால் புதிய தலைவர் யார் என்ற கேள்வி நீடிக்கிறது.

ஊடகங்கள் விற்பனைக்கு! ஊடகங்களின் அதிர்ச்சிகரமான போக்கு குறித்த உண்மைகள் இந்துத்துவப் பிரச்சாரத்திற்குப் பெரும் ஊடக நிறுவனங்கள் ஒப்புதல்... கறுப்புப் பணமாகக் கைக்கூலி பெறச் சம்மதம்... பணம் வாங்கி செய்தி ‘தயார் செய்து’ போடத் தயார்! ஊடகங்களின் இத்தகைய போக்கைக் கையும் களவுமாகப் படம் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறது கோப்ராபோஸ்ட் ஊடகம்! “இந்துத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தேர்தல் முடிவை பாஜகவுக்குச் சாதகமா


ஊடகங்களின் இத்தகைய போக்கைக் கையும் களவுமாகப் படம் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறது கோப்ராபோஸ்ட் ஊடகம்!

“இந்துத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தேர்தல் முடிவை பாஜகவுக்குச் சாதகமாகத் திருப்பப் பணம் வாங்கிக்கொண்டு உதவி செய்வீர்களா?” — தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் நிருபர் கேட்ட இந்தக் கேள்விக்கு இந்திய ஊடகங்களின் பெரும் புள்ளிகள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். கோப்ராபோஸ்ட் நடத்திய இந்த ‘ஸ்டிங்’ ஆபரேஷன் (உண்மைகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கை) பெருஊடக முதலாளிகளின் போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது.

வகுப்புவாதரீதியில் வாக்காளர்களைப் பிளவுபடுத்தி இந்துத்துவச் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பேரங்களுக்கு எவ்வாறு ஊடக நிறுவனங்கள் பலவும் தயாராக உள்ளன என கோப்ராபோஸ்ட் செய்தி இணையதளம் சுமார் இரு மாதங்களுக்கு முன்பு ரிப்போர்ட் செய்தது.

இப்போது இந்த இணைய தளம் இரண்டாம் தவணையாக வீடியோ பதிவுகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செய்திகளின் போர்வையில் இந்துத்துவப் பிரச்சாரங்களை (Advertorials) போட்டால் பணம் தருகிறோம் என்று ஆசைகாட்டியதற்கு உடன்பட்டு இந்தியாவின் மிகப்பெரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகிகளும் உடைமையாளர்களும் தலைகுப்புற விழுந்ததை மாறுவேடத்தில் சென்ற கோப்ராபோஸ்ட் நிருபர் ரகசியமாகப் படம்பிடித்திருக்கிறார்.

உரிய தொகை கொடுத்தால் வகுப்புவாத பேதத்தைத் தூண்டுவது மட்டுமல்ல, தேர்தல் முடிவையே ஒரு கட்சிக்கு ஆதரவாகத் திருப்புவதற்காகப் பணிபுரியத் தயார் என ஊடக நிறுவனங்கள் எவ்வாறு தயாராயின என்பதை இந்த கோப்ராபோஸ்ட் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

இந்த பேரத்துக்கு உடன்பட மறுத்தவர்கள் இரண்டே இரண்டு பேர். அவர்கள், வங்காளப் பத்திரிகைகளான வர்த்தமான்,தைனிக் ஜாக்ரண்ஆகியவற்றின் பிரதிநிதிகள்.

டைம்ஸ் குரூப்பின் உடையமையாளரான வினீத் ஜெயின் உள்பட பலர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை ரொக்கமாக, அதாவது கறுப்புப் பணமாக, வாங்கிக்கொள்ளும் விதம் குறித்து விவாதித்தது நிதியமைச்சகத்திலும் வருமான வரி இலாக்காவிலும் அபாய மணி அடித்திருக்க வேண்டும்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை உள்பட பல ஊடகங்கள் டைம்ஸ் குரூப்புக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணத்தை ஒழிக்க மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகவும் தேவை என ஆதரித்து இயக்கம் நடத்தியது சேனல் டைம்ஸ் நவ். பணத்தைக் கறுப்புப் பணமாக ரொக்கமாகக் கொடுத்தால் அதை மற்ற பிசினஸ் பேர்வழிகள் வாயிலாக வெள்ளையாக மாற்றிப் பெற்றுக்கொள்கிறேன் என்று இப்போது கூறுகிறார் இதன் உடைமையாளர் ஜெயின்.

எப்படி நடந்தது இந்த ஆபரேஷன்?

புஷ்ப் ஷர்மா என்ற நிருபரை மாறுவேடத்தில் ஆச்சார்யா அடல் என்ற போர்வையில் கோப்ராபோஸ்ட் அனுப்பியது. பெயர் குறிப்பிடப்படாத 'சங்கம்' ஒன்றின் பிரதிநிதி போலத் தன்னைக் காட்டிக்கொண்டு ஊடக உரிமையாளர்களையும் முக்கியப் புள்ளிகளையும் இவர் சந்தித்தார். ஆர்எஸ்எஸ் உறுப்பினராக அல்லது அந்த அமைப்புக்கு மிகவும் வேண்டப்பட்டவராகத் தன்னை இவர் காட்டிக்கொண்டார்.

பணம் பெற்றுக்கொண்டு தங்களது பத்திரிக்கைகள், ரேடியோ நிலையங்கள், தொலைக்காட்சி சேனல்கள், இணைய தளங்கள் ஆகியவற்றில் இந்துத்துவப் பிரச்சாரத்தை மேற்கொள்ள ஊடக நிறுவன நிர்வாகிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ‘ஆச்சார்யா அடல்’ அவர்களோடு மேற்கொண்ட பேரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளை கோப்ராபோஸ்ட் இணையதளம் யு டியூப் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பதிவுகள் இந்திய ஊடகங்களின் நேர்மையைப் பரிகசிப்பதாக அமைந்துள்ளன.

விலைபோன டைம்ஸ் குரூப்

கோப்ராபோஸ்ட்டினால் அம்பலப்படுத்தப்பட்டவர்களிலேயே மிகப் பெரும் புள்ளி டைம்ஸ் குரூப்பின் உடைமையாளரும் நிர்வாக இயக்குநருமான விநீத் ஜெயின்.

கிருஷ்ணரையும் பகவத் கீதையையும் பற்றிய நிகழ்ச்சிகள் / கட்டுரைகள் என்னும் போர்வையில் இந்துத்துவாவுக்கும் அதன் அரசியல் செயல்திட்டத்துக்கும் பரப்புரை செய்வதற்காக ரூ.500 கோடி ரூபாய் தருவதாக ஆச்சார்யா அடல் கூறினார். இது குறித்து அவர் ஜெயினுடனும் டைம்ஸ் குரூப்பின் நிர்வாகத் தலைவர் சஞ்சீவ் ஷாவுடனும் பேரம் பேசியது பல வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.

ரொக்கமாகப் பணம் கொடுத்தால் டைம்ஸ் குரூப்பிற்கு உபயோகம் ஏதும் இல்லை என்று ஜெயினும் ஷாவும் சொல்கிறார்கள். அதே சமயத்தில் ரொக்கத்தை எப்படிச் செலுத்துவது என வழிகாட்டவும் செய்கின்றனர். "பணத்தை சில பெரிய கார்பொரேட் நிறுவனங்களிடம் செலுத்தினால் அவர்கள் அதை சுத்தமாக வெள்ளைப் பணமாக மாற்றிவிடுவார்கள்" என்று சில பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டனர் என கோப்ராபோஸ்ட் தெரிவித்தது. "நீங்கள் அவர்களுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்தினால் அவர்கள் காசோலை வாயிலாக எங்களுக்குச் செலுத்துவார்கள்”, என வினீத் ஜெயின் கூறியது பதிவாகியிருக்கிறது. எந்த இடத்தில் யார் வாங்கிக்கொள்வார், எப்படி அது மாற்றப்படும் என்பதையெல்லாம் அவரது உதவியாளர் ஷா விளக்குகிறார்.

2017ஆம் ஆண்டில் டைம்ஸ் குரூப்பின் மொத்த வருவாயான ரூ. 9976 கோடியில் ரூ. 500 கோடி என்பது 5%க்கும் சற்று அதிகம்.

TheTimes Group- Part 1 of 3

TheTimes Group- Part 2 of 3

TheTimes Group- Part 3 of 3

கல்லி பூரி (இண்டியா டுடே குரூப்)

இண்டியா டுடே குரூப்பின் துணைத் தலைவரான கல்லி பூரியுடன் நடந்த சந்திப்பில் கோப்ராபோஸ்ட் தலைமறைவு நிருபர், இதே திட்டத்தை முன்வைக்கிரார். ராமரும் அயோத்தியும் சர்ச்சைக்குள்ளாகிவிட்டபடியால் கிருஷ்ணரையும் பகவத் கீதையையும் பயன்படுத்த வேண்டும் என்கிறார். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்த வேண்டாமென கல்லி பூரி கேட்டுக்கொண்டார். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் இது தவிர்க்கப்பட முடியாது என அவர் பதில் கூறினார். கல்லி பூரியின் இந்த ஆட்சேபணையால் பேரம் முறியவில்லை.

இவற்றைப் பயன்படுத்தி அவர்களுடைய "கள நடவடிக்கைகளின்" பகுதியாக பரந்த மக்கள் மத்தியில் இந்துத்துவாவை கொண்டுசெல்ல இண்டியா டுடே க்ரூப் இதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனால் ஏற்படும் வகுப்புவாதப் பிளவுக்குத் தன்னைப் பொறுப்பாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். கல்லி பூரி இதற்கு ஒப்புக்கொள்வதாகக் கூறினார். ஆனால் உங்களுடைய நடவடிக்கை ஏதாவது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லையெனில் அதை நாங்கள் விமர்சனம் செய்வோம் என்று மட்டும் கூறினார்.

முன்னதாக கோப்ராபோஸ்ட் நிருபர் இண்டியா டுடே குரூப்பைச் சேர்ந்த டிவி டுடே சேனல் முதன்மை வருவாய் அதிகாரி ராகுல் குமார் ஷாவைச் சந்தித்தார். "நாங்கள் அரசாங்கத்திற்கு மிக மிக ஆதரவாளர்கள். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்" என்று கூறினார் குமார் ஷா. பின்னர் ரூ.275 கோடிக்கு ஒரு விளம்பர நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் திட்டத்தை முன்வைத்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். பெயருக்குத்தான் அது பகவத் கீதையை பரப்புவதற்கான தொகை. இந்துத்துவப் பிரச்சாரமே அதன் உள்ளீடு.

275 கோடி என்பது 2017இல் இண்டியா டுடே ஈட்டிய வருவாயில் 20%க்குச் சமம்.

India Today - Part 1 of 2

India Today – Part 2 of 2

(டைம்ஸ் ஆப் இந்தியா குரூப் முதலாளி வினீத் ஜெயின் மற்றும் இண்டியா டுடே முதலாளி அருண் பூரி மகள் கல்லி பூரி ஆகிய ஊடகப் பிரபலங்கள் விலைபோன கதையை இன்று பார்த்தோம். மேலும் 25 முக்கிய ஊடகப் பிரபலங்கள் விலைபோன சிலரின் கதையை நாளை பார்ப்போம்.)

நன்றி: தி வயர்

தமிழில்: பா.சிவராமன்

Friday, May 25, 2018

⭐⭐⭐6 ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச டேப் [TAB] விரைவில் அறிவிப்பு

6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு டேப் (tab) கொடுப்பது சம்பந்தமாக  மொத்தமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை  60 லட்சம் என கணக்கெடுப்பு முடிந்து தயார் நிலையில் உள்ளது.

6 முதல் 10 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இலவசமாக டேப் கொடுப்பது சார்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Tuesday, May 22, 2018

கேரளாவில் மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்


 அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் ராஜா ஆட்சியில் தோழ் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
1) குயவர் ( மண்பாண்டம் தொழில் சாதியினர் )
2) சாணார் ( நாடார்) மரம் ஏறும் தொழில் சாதியினர்
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் ( தேவர் )
4) துலுக்கப்பட்டர் ( மாப்பிள்ளை ) சாதியினர்
5) இடையர் ( கோணர் )
6) நாவீதர் ( முடி திருத்தம்) சாதியினர்
7) வண்னார் ( சலவை தொழில்) சாதியினர்.
8) சக்கிலியர் ( துப்புரவு தொழில்) சாதியினர்
9) பறையர் ( பறையடிக்கும் தொழில்) சாதியினர்
10) நசுரானியர் ( சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்
11) குறவர் ( கூடை முடைதல்) சாதியினர்
12) வாணியர் ( வாணிய செட்டியார்) சாதியினர்
13) ஈழவர் , தீயர் ( இல்லத்து பிள்ளைமார் ) மற்றும் அந்த சாதியோடு    தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்
14) பாணர் ( ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர். 
15) புலையர் ( பறையருள் ஒர் உட்சாதி வேட்டைத் தொழில்) சாதியினர்
16) கம்மாளர் ( ஆசாரி) கைவினை தொழில் சாதியினர்
17) கைக்கோளர் ( முதலியார்) சாதியினர்.
18) பரவர் ( முத்தரையர்) சாதியினர்.

துப்பாக்கிச் சூடு அல்ல, மற்றொரு தாமிரபரணி படுகொலை !




மதியம் ஒருவர் பலி என்றார்கள், பிறகு இரண்டு பேர் என்றார்கள்... மாலையோ பத்து பேர் கொலை, பதினைந்து பேர் கொலை என்று நெஞ்சை நெரிக்கும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘எங்களைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்று போராட்டம் நடத்திய பொதுமக்களை, பெண்களை சுட்டுக் கொன்றிருக்கிறது தமிழக அரசின் காவல்துறை.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அறவழியில் போராடி வரும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தின் நூறாவது நாளான இன்று (மே 22) தூத்துக்குடி கலெக்டரிடம் மனு கொடுக்கப் போவதாக மக்கள் ஏற்கனவே அறிவித்தனர்.இதே போன்ற நிலையில்    23/07/199 அன்று மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கொடுக்க சென்றனர்.
அப்போதைய திமுக அரசு நயவஞ்சகமாக தனியார் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக. இருந்து கொண்டு புதிய தமிழகம் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள்,தமிழ் மாநில காங்கிரஸ் தொழிலாளர்கள் பேரணியாக சென்றவர்களை தாமிரபரணி ஆற்றில் தள்ளி 17 பேர்களை படுகொலை செய்தார்கள்.அந்த சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் கழித்து திரும்பவும் நினைவுபுடுத்தும் விதமாக நடந்துள்ள செயல் அதிர்ச்சியளிக்கிறது.


நேற்றிரவு 144
பெரு மக்கள் திரள் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காரணம் தூத்துக்குடி பொதுமக்களோடு மீனவ கிராமங்களில் இருந்து போராட்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான மீனவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்ததை ஒட்டி கலெக்டரும் எஸ்பியும் ஆலோசித்து நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் மனுவைத் தூக்கிக் கொண்டு வரக் கூடாது என்பதுதான் இந்த 144 தடை உத்தரவின் அர்த்தம்.
மேலும் தூத்துக்குடி நகரத்தைச் சுற்றிலும் பல சோதனைச் சாவடிகளை அமைத்து மக்கள் நகரத்துக்குள் உள்ளே ஊடுருவிடக் கூடாது என்று முடிவு செய்தனர். எந்தெந்த ஊர்களிலிருந்து மக்கள் போராட்டத்துக்கு வருவார்களோ, அங்கேயேப் போய் மக்களை ஊருக்கு வெளியே வரவிடாமல் தடுக்கப் பார்த்தனர். வாடகை வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்களை மிரட்டி வாடகைக்குப் போகாமல் இருக்க எச்சரித்தனர்.
இன்று காலை 10.30 மாதா கோவில் வளாகம்...
போலீஸாரின் இத்தனை எச்சரிக்கையையும் மீறி தூத்துக்குடி மாதாகோவில் வளாகத்தில் இருந்து மக்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்துக்குப் புறப்பட திரண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் குழுமினர்.
மாதா கோவில் வளாகத்தில் இருந்து மக்களின் போராட்டக் குறிக்கோளான தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. காலை 10.30-க்கு ஸ்டெர்லைட்டை மூடு வேதாந்தா ஓடு... என்ற கோஷத்தோடு மக்கள் புறப்பட அங்கே நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. காரணம் போலீசாரின் எண்ணிக்கையை விட பல மடங்கு கூட்டம் மக்கள் திரண்டனர். அதனால் அப்போது போலீஸாரின் எச்சரிக்கையையும் தடுப்பையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முன்னேறியது.
மாதாகோவில் வளாகத்தில் இருந்து மக்கள் தடையை மீறிப் புறப்பட்டதையும், போலீஸாரின் எண்ணிக்கை அங்கே மிகக் குறைவாக இருப்பதையும் எஸ்.பி அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தினர். உடனடியாக அடுத்த பாயிண்ட்டான விவிடி சிக்னல் அருகே அதிகப்படியான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
விவிடி சிக்னல் பகல் 11.30
மாதாகோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட மக்கள் கையில் காகித மனுக்களோடு கலெக்டரை பார்க்க நடந்து சென்றனர். மாதாகோவில் வளாகத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது விவிடி சிக்னல். அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் 3 கிலோ மீட்டர் தூரம். எனவே போலீஸாருக்குக் கடுமையான உத்தரவு வந்தது. ‘விவிடி சிக்னலுக்குள்ளேயே அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும், அதையும் தாண்டி முன்னேறவிட்டால் கலெக்டர் அலுவலகத்தைத் தொட்டுவிடுவார்கள். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குப் போகக் கூடாது’ என்பதே போலீஸாருக்கு வந்த உத்தரவு.
அதன்படி மக்கள் பேரணி விவிடி சிக்னல் அருகே வந்தபோது அங்கே சுமார் ஆயிரம் போலீஸார் திரண்டு நின்றனர். இதற்கு மேல் உங்களை அனுமதிக்க முடியாது, திரும்பிச் சென்றுவிடுங்கள் என்று போலீஸார் எச்சரித்தனர்.
சிக்னலைத் தாண்டிய இளைஞர்கள்...
ஆனால் ஊர்வலத்தில் வந்த பெரும்பான்மையோர் இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் இருக்கும் இளைஞர்கள். எனவே அவர்கள் போலீஸாரின் எச்சரிக்கையை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், நாங்கள் கலெக்டரைப் பார்க்கத்தான் போகிறோம் என்று கூறியபடியே போலீஸாரின் தடுப்புகளை எல்லாம் மீறி விவிடி சிக்னலைக் கடந்தனர். இது போலீஸாருக்கு பெரும் தலை குனிவாகிவிட்டது.
புகை மயம்!
சாரை சாரையாக மக்களும் பெண்களும் கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க வேறு வழியின்றி உடனடியாக தடியடியை ஆரம்பித்தனர். கூட்டம் பின்னோக்கி ஓடும் என்று கணக்குப் போட்டனர் போலீஸார். ஆனால் கூட்டம் கலெக்டர் அலுவலகம் நோக்கி அதாவது முன்னோக்கி ஓடியது. அடுத்தடுத்த நிமிடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பின் 12 மணியளவில் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. அந்த இடமே புகைமயமானது.
கொலையான பத்து பேர் விவரம்!
திடீர் திடீர் என்று துப்பாக்கிகள் வெடித்தன. கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வாகனங்கள் பற்றி எரிந்தன. சில மணி நேரத்துக்கு தூத்துக்குடியின் செல் போன் டவர்கள் செயல் இழக்கச் செய்யப்பட்டன.
ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்), கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி), கந்தையா (சிலோன் காலனி - தூத்துக்குடி), வெனிஸ்டா (17 - பெண்) தூத்துக்குடி, தமிழரசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை - தூத்துக்குடி), சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி), அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி), மணிராஜ் (தூத்துக்குடி) ஆகியோரும் மேலும் சில பெண்களும் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களைக் குறிவைத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் தூத்துக்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரேஸ்புரம் மாலை 3.45
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பல்வேறு தலைவர்களும் மதியம் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீஸாரின் ஒரு டீம் தூத்துக்குடியின் மீனவர் பகுதியான திரேஸ்புரத்துக்கு மாலை 3.45 க்கு சென்றிருக்கிறது. அங்கே போராட்டத்தைத் தூண்டியதாக சிலரைத் தேட அதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அங்கேயும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கிறார்கள் போலீஸார். இது மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
தூத்துக்குடியே இப்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கை, கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள். எனவே துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
கலெக்டரை சந்திக்க காகிதத்தில் எழுதப்பட்ட மனுவைக் கொண்டு வந்தவர்கள் முன்னால் தமிழக போலீஸார் துப்பாக்கியைத் தூக்கியதால் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

Monday, May 21, 2018

ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்


ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது.  ஆசிரியர்கள் ஸ்டிரைக் என்று சொன்னால் மக்கள் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று கேட்கிறார்–்கள். 365 நாட்கள் பணி நாட்கள் உள்ள நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. 

அதிலே தேர்வுக்காக குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் 170 முதல் 175 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. புதிய பாடங்களை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

 

பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வசதியாக தொடக்கப் பள்ளிகள்  30 பள்ளிகளாக பிரிக்கப்பட்டு  அவர்கள் ஆண்டுக்கு 2 முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.  

மேலும், பள்ளிகள் மீது குற்றம் குறைகள் மற்றும் புகார்கள் வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதில் கொடுத்தாக வேண்டும். அதற்கான தீர்வுகளையும் அவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய அனுமதியும் வழங்கப்படுகிறது. 

வேகமாக பணி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில், ஒரு நபர் கமிட்டியிடம் ஆசிரியர்கள் அலுவலர்கள் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்நிலையில் பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 

அதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆசிரியர்கள் உண்ணா விரதம் போன்ற போராட்டங்களை கைவிட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும். 

 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இரண்டு நாட்களில் குழு அமைத்து அவற்றுக்கு தீர்வு காணப்படும். 

 

தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளி தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.  கூடுதல் கட்டணம் கேட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. 

அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.