மதியம் ஒருவர் பலி என்றார்கள், பிறகு இரண்டு பேர் என்றார்கள்... மாலையோ பத்து பேர் கொலை, பதினைந்து பேர் கொலை என்று நெஞ்சை நெரிக்கும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘எங்களைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்று போராட்டம் நடத்திய பொதுமக்களை, பெண்களை சுட்டுக் கொன்றிருக்கிறது தமிழக அரசின் காவல்துறை.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அறவழியில் போராடி வரும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தின் நூறாவது நாளான இன்று (மே 22) தூத்துக்குடி கலெக்டரிடம் மனு கொடுக்கப் போவதாக மக்கள் ஏற்கனவே அறிவித்தனர்.இதே போன்ற நிலையில் 23/07/199 அன்று மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கொடுக்க சென்றனர்.
அப்போதைய திமுக அரசு நயவஞ்சகமாக தனியார் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக. இருந்து கொண்டு புதிய தமிழகம் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள்,தமிழ் மாநில காங்கிரஸ் தொழிலாளர்கள் பேரணியாக சென்றவர்களை தாமிரபரணி ஆற்றில் தள்ளி 17 பேர்களை படுகொலை செய்தார்கள்.அந்த சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் கழித்து திரும்பவும் நினைவுபுடுத்தும் விதமாக நடந்துள்ள செயல் அதிர்ச்சியளிக்கிறது.
நேற்றிரவு 144
பெரு மக்கள் திரள் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காரணம் தூத்துக்குடி பொதுமக்களோடு மீனவ கிராமங்களில் இருந்து போராட்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான மீனவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்ததை ஒட்டி கலெக்டரும் எஸ்பியும் ஆலோசித்து நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் மனுவைத் தூக்கிக் கொண்டு வரக் கூடாது என்பதுதான் இந்த 144 தடை உத்தரவின் அர்த்தம்.
மேலும் தூத்துக்குடி நகரத்தைச் சுற்றிலும் பல சோதனைச் சாவடிகளை அமைத்து மக்கள் நகரத்துக்குள் உள்ளே ஊடுருவிடக் கூடாது என்று முடிவு செய்தனர். எந்தெந்த ஊர்களிலிருந்து மக்கள் போராட்டத்துக்கு வருவார்களோ, அங்கேயேப் போய் மக்களை ஊருக்கு வெளியே வரவிடாமல் தடுக்கப் பார்த்தனர். வாடகை வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்களை மிரட்டி வாடகைக்குப் போகாமல் இருக்க எச்சரித்தனர்.
இன்று காலை 10.30 மாதா கோவில் வளாகம்...
போலீஸாரின் இத்தனை எச்சரிக்கையையும் மீறி தூத்துக்குடி மாதாகோவில் வளாகத்தில் இருந்து மக்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்துக்குப் புறப்பட திரண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் குழுமினர்.
மாதா கோவில் வளாகத்தில் இருந்து மக்களின் போராட்டக் குறிக்கோளான தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. காலை 10.30-க்கு ஸ்டெர்லைட்டை மூடு வேதாந்தா ஓடு... என்ற கோஷத்தோடு மக்கள் புறப்பட அங்கே நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. காரணம் போலீசாரின் எண்ணிக்கையை விட பல மடங்கு கூட்டம் மக்கள் திரண்டனர். அதனால் அப்போது போலீஸாரின் எச்சரிக்கையையும் தடுப்பையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முன்னேறியது.
மாதாகோவில் வளாகத்தில் இருந்து மக்கள் தடையை மீறிப் புறப்பட்டதையும், போலீஸாரின் எண்ணிக்கை அங்கே மிகக் குறைவாக இருப்பதையும் எஸ்.பி அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தினர். உடனடியாக அடுத்த பாயிண்ட்டான விவிடி சிக்னல் அருகே அதிகப்படியான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
விவிடி சிக்னல் பகல் 11.30
மாதாகோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட மக்கள் கையில் காகித மனுக்களோடு கலெக்டரை பார்க்க நடந்து சென்றனர். மாதாகோவில் வளாகத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது விவிடி சிக்னல். அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் 3 கிலோ மீட்டர் தூரம். எனவே போலீஸாருக்குக் கடுமையான உத்தரவு வந்தது. ‘விவிடி சிக்னலுக்குள்ளேயே அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும், அதையும் தாண்டி முன்னேறவிட்டால் கலெக்டர் அலுவலகத்தைத் தொட்டுவிடுவார்கள். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குப் போகக் கூடாது’ என்பதே போலீஸாருக்கு வந்த உத்தரவு.
அதன்படி மக்கள் பேரணி விவிடி சிக்னல் அருகே வந்தபோது அங்கே சுமார் ஆயிரம் போலீஸார் திரண்டு நின்றனர். இதற்கு மேல் உங்களை அனுமதிக்க முடியாது, திரும்பிச் சென்றுவிடுங்கள் என்று போலீஸார் எச்சரித்தனர்.
சிக்னலைத் தாண்டிய இளைஞர்கள்...
ஆனால் ஊர்வலத்தில் வந்த பெரும்பான்மையோர் இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் இருக்கும் இளைஞர்கள். எனவே அவர்கள் போலீஸாரின் எச்சரிக்கையை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், நாங்கள் கலெக்டரைப் பார்க்கத்தான் போகிறோம் என்று கூறியபடியே போலீஸாரின் தடுப்புகளை எல்லாம் மீறி விவிடி சிக்னலைக் கடந்தனர். இது போலீஸாருக்கு பெரும் தலை குனிவாகிவிட்டது.
புகை மயம்!
சாரை சாரையாக மக்களும் பெண்களும் கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க வேறு வழியின்றி உடனடியாக தடியடியை ஆரம்பித்தனர். கூட்டம் பின்னோக்கி ஓடும் என்று கணக்குப் போட்டனர் போலீஸார். ஆனால் கூட்டம் கலெக்டர் அலுவலகம் நோக்கி அதாவது முன்னோக்கி ஓடியது. அடுத்தடுத்த நிமிடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பின் 12 மணியளவில் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. அந்த இடமே புகைமயமானது.
கொலையான பத்து பேர் விவரம்!
திடீர் திடீர் என்று துப்பாக்கிகள் வெடித்தன. கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வாகனங்கள் பற்றி எரிந்தன. சில மணி நேரத்துக்கு தூத்துக்குடியின் செல் போன் டவர்கள் செயல் இழக்கச் செய்யப்பட்டன.
ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்), கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி), கந்தையா (சிலோன் காலனி - தூத்துக்குடி), வெனிஸ்டா (17 - பெண்) தூத்துக்குடி, தமிழரசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை - தூத்துக்குடி), சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி), அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி), மணிராஜ் (தூத்துக்குடி) ஆகியோரும் மேலும் சில பெண்களும் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களைக் குறிவைத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் தூத்துக்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரேஸ்புரம் மாலை 3.45
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பல்வேறு தலைவர்களும் மதியம் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீஸாரின் ஒரு டீம் தூத்துக்குடியின் மீனவர் பகுதியான திரேஸ்புரத்துக்கு மாலை 3.45 க்கு சென்றிருக்கிறது. அங்கே போராட்டத்தைத் தூண்டியதாக சிலரைத் தேட அதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அங்கேயும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கிறார்கள் போலீஸார். இது மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
தூத்துக்குடியே இப்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கை, கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள். எனவே துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
கலெக்டரை சந்திக்க காகிதத்தில் எழுதப்பட்ட மனுவைக் கொண்டு வந்தவர்கள் முன்னால் தமிழக போலீஸார் துப்பாக்கியைத் தூக்கியதால் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment