நடிகர் விவேக் - தேவயானி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘எழுமின்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால் , சிம்பு, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் வெளியான உரு படத்தின் தயாரிப்பாளரான வி.பி.விஜி எழுமின் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று(மே21) சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு, முதலில் தனது ரசிகர்களுக்குத் தேவையானதைப் பேசி அவர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார். அதற்குமுன்பாக காலத்தாமதமாக வரும் தனது வழக்கத்தை மாற்றிக்கொள்வதாகவும் உறுதியளித்தார். “4 பேர் கை தட்டினால் போதும் நான் இனிமேல் நல்ல படங்களை கொடுப்பேன். ஆனால், தயவு செய்து ரசிகர்கள் கட்-கவுட் வைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். உயிரை பறிக்கும் கட்-அவுட்கள் எனக்குத் தேவையில்லை” என்று கூறினார்.
அதன்பின் படத்தின் கான்செப்டுக்குள் நுழைந்தவர் “இது குழந்தைகள் சம்மந்தமான படம் என்பதால் இதை சொல்லியே ஆக வேண்டும். செயினை திருடும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தையை தண்டிக்கிறோமே தவிற, ஏன் அவன் அப்படி இருக்கிறான் என்று சிந்திக்காத சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம். யார் தலைவன்? இன்றைக்கு யார் தலைவன்? நாளைக்கு யார் தலைவன்? இது யார் கொடி? இது என்ன கொள்கை? அது என்ன கொள்கை? எதுவுமே நமக்குத் தெரியவில்லை. நம்ம நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை. நம்முடைய தலையெழுத்து நமக்கு எப்படித் தெரியும்” என்று அரசியலுக்குள் நுழைந்தவர் அப்படியே யூடர்ன் அடித்து மீண்டும் நிகழ்ச்சியின் கான்செப்டுக்குள் நுழைந்தார்.
”மகன்களிடம் பெண்கள் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே பாலியல் பலாத்காரம் குறையும். நான்தான் நடிகர் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தினேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அன்றைய தினம் விவேக் மனசு வைக்கவில்லை என்றால் நடிகர் சந்தானம் இவ்வளவு பெரிய ஆளாக வந்திருக்க முடியாது” என்று கூறினார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி, “இந்தப் படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் ட்ரெய்லர் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் கல்லூரி மற்றும் பள்ளி விழாக்களுக்குச் சென்று வருகிறேன். எல்லாரும் ஒன்றை மட்டுமே நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள், அது சினிமா. சினிமா பாடல்களைத்தான் பாடுகிறார்கள், சினிமா பாடல்களுக்குத்தான் டான்ஸ் ஆடுகிறார்கள். இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குச் சென்றால் கூட எல்லாம் சினிமா மயமாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, தற்காப்புக் கலையை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார் வி.பி.விஜி. நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். என் மகளை அழைத்துக் கொண்டுபோய் நிச்சயம் இந்தப் படத்தைக் காண்பிப்பேன். எவனாவது ஒருத்தன் செயினைப் பிடுங்கினால், ‘ஐயையோ...’ என்று பயந்து நின்றுவிடக் கூடாது. ‘அடிங்க்... என் செயினையா பறிக்கிற?’ என்று ஒரு குத்து விட வேண்டும். அந்தளவுக்குக் குழந்தைகள் தயாராக வேண்டும். குழந்தைகளிடம் இருந்த இந்த ஃபயரை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. நமக்கு நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளிடம் போன், லேப்டாப்பைக் கொடுத்து விடுகிறோம் அல்லது டிவி பார்க்கச் சொல்லி விடுகிறோம். அப்படி இல்லாமல், மேடையில் தங்கள் திறமையை வெளிக்காட்டிய குழந்தைகளைப் பார்த்து எனக்கு ஊக்கமாக இருந்தது” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால், “நாங்கள் அனைத்து திரைப்படங்களின் நிகழ்ச்சிகளுக்கும் வர முடியாத நிலை உள்ளது. ஏனெனில் எங்களுக்கு பல வேலைகள் இருக்கின்றன. ஒரு சில படங்களை பார்த்து விட்டுதான் நாங்கள் வராமல் இருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு எங்கள் மீது வைக்கப்படுகிறது. இதுபோன்ற தற்காப்புக் கலை குறித்த படங்களுக்கு நாங்கள் சிறப்பு விருந்தினர்களாக வரக்கூடாது. ஜாக்கிசான் போன்ற தற்காப்பு கலை வல்லுநர்கள்தான் வர வேண்டும்’’ என்றார்.
மேலும் பேசிய விஷால் , பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களை தகர்த்தெரியும் விதமாக எழுமின் திரைப்படம் இருக்கும் என்றும் , நடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த எம்.எல்.ஏ அல்லது சிறந்த மந்திரியாக வருவார் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment