Sunday, May 20, 2018

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைமை எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டு பாஜகவின் பல்வேறு பந்து வீச்சுகளுக்குப் பலியாகாமல் காங்கிரஸ், மஜத விக்கெட்டுகளைக் காப்பாற்றி இன்று குமாரசாமி முதல்வர் ஆக உதவியிருக்கிறார். கனகபுரா தொகுதியில் இருந்து ஜெயித்திருக்கும் காங்கிரஸின் ஆபத்பாந்தவன்!


சட்டமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட எடியூரப்பா, நேற்று மாலை 4.30 மணிக்கு ராஜினாமா செய்துவிட்டு அவையைவிட்டு வெளியேறியபோது, எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்த மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் குமாரசாமி எழுந்து சில அடிகள் நடந்தார்.

முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படர, அவர் தேடிச் சென்ற நபர் முன்னாள் அமைச்சரான டி.கே.சிவக்குமார். வேறு யார் கைகளையும் பற்றாமல் குமாரசாமி தேடிச் சென்று சிவக்குமாரின் கைகளைப் பற்றிக்கொள்ள அப்போது சட்டமன்ற வளாகத்தில் நிறைந்த கேமராக்கள் இவர்களை அழைத்தன. குமாரசாமியும் சிவக்குமாரும் சேர்ந்து வெற்றிக்கான விரல் அடையாளத்தை ஊடக கேமராக்களிடம் காட்டினர். அந்தக் காட்சிக்குப் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது.

ஆம்... காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் கர்நாடக வேட்பாளர்களிலேயே மூன்றாவது பெரிய பணக்காரருமான சிவக்குமார்தான், கடந்த நான்கு நாள்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைக் கட்டிக் காப்பாற்றி ‘ஆபரேஷன் கமல்’ என்ற பாஜகவின் குதிரை வேட்டைக்குப் பதிலடி கொடுத்தவர். ‘டி.கே’ என்று சுருக்கமாக சிவக்குமாரை அழைக்கும் கர்நாடக அரசியல் மற்றும் பத்திரிகையாளர் வட்டாரத்தினர் இப்போது அவரை, ‘காங்கிரஸின் ட்ரபுள் ஷூட்டர்’ அதாவது ‘காங்கிரஸின் ஆபத்பாந்தவன்’ என்று அழைக்கிறார்கள்.

விக்கெட்டுகளைக் காப்பாற்றியவர்!

சிவக்குமார் ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்தவர். குமாரசாமியும் இதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் என்றாலும் தேவ கவுடா குடும்பத்தினரோடு சிவக்குமாருக்கு இணக்கம் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் பகைமைகூட இருந்து வந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைமை எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டு பாஜகவின் பல்வேறு பந்து வீச்சுகளுக்குப் பலியாகாமல் காங்கிரஸ், மஜத விக்கெட்டுகளைக் காப்பாற்றி இன்று குமாரசாமி முதல்வர் ஆக உதவியிருக்கிறார்.

கனகபுரா தொகுதியில் இருந்து ஜெயித்திருக்கும் சிவக்குமார்தான் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான நிலையிலும், இடைத்தேர்தல் நேரங்களிலும் நினைவுக்கு வருபவர். 1980இல் இருந்தே அரசியலில் வெற்றிக் கனிகளை சுவைத்து வருபவர் சிவக்குமார். ஆனபோதும் அவரது சிறப்பம்சமே தான் மட்டும் வெற்றி பெறாமல், காங்கிரஸ்காரர்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதுதான்.

சிவக்குமார் மிகப்பெரும் பணக்காரர். தனது அதிகாரபூர்வ சொத்து மதிப்பே 618 கோடி ரூபாய் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கும் அரசியல்வாதி. தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து பாஜகவின் ரெட்டி சகோதர்கள் ஆடும் ஆட்டத்துக்கு எதிராட்டம் ஆடி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைக் காப்பாற்றியிருக்கிறார் சிவக்குமார்.

மகாராஷ்டிரா, குஜராத் அனுபவம்!

அரசியல் விளையாட்டின் முக்கியமான நம்பர் கேம்களில் காங்கிரஸுக்காகப் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டுவருகிறார் சிவக்குமார். 2002ஆம் ஆண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் எஸ்.எம்.கிருஷ்ணா முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார் சிவக்குமார். அப்போது மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் முதல்வராக விலாஸ் ராவ் தேஷ்முக் பதவியில் இருந்தார். அவருக்கு எதிராக 2002 ஜூன் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை மும்பையில் இருந்து பெங்களூரு அழைத்து வந்து நம்பிக்கையில்லாத் தீர்மான தேதி வரைக்கும் பாதுகாக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுப் பாதுகாத்து அனுப்பி வைத்தார்.

2002இல் இந்த அனுபவம் என்றால்... கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலங்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைக் காப்பாற்றினார் சிவக்குமார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகமது பட்டேலைத் தோற்கடிக்க பாஜகவினர் சாம, தான, தண்ட பேதங்களைப் பயன்படுத்தினர். கடைசியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குப் பெரிய அளவில் பேரம் பேசி தங்களுக்கு ஆதரவாக மாற்ற பலத்த முயற்சி மேற்கொண்டனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைக் காப்பாற்றும் பொறுப்பைக் கர்நாடக அமைச்சராக இருந்த சிவக்குமாரிடம் கொடுத்தது டெல்லி தலைமை.

அதன்படியே குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு அழைத்து வந்து பாஜகவினரின் வலையில் சிக்காமல் காப்பாற்றி அகமது பட்டேல் வெற்றி பெற பாடுபட்டார். இதற்காக மத்திய அரசின் வருமான வரிச் சோதனைகளையும் எதிர்கொண்டார் சிவக்குமார். அதே ரீதியில் இப்போது தன் சொந்த மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ஆபத்து நேர்ந்தபோதும் சிவக்குமாரே களமிறக்கப்பட்டார்.

டி.கேவுக்கான பரிசு என்ன?

வருமான வரி ஏய்ப்பு, சட்ட விரோத கிரானைட் தொழில், நில அபகரிப்பு என்று பல்வேறு புகார்களுக்கு ஆளான சிவக்குமார் தன் அரசியல் வரலாற்றில் முதன்முதலில் தேவ கவுடாவை எதிர்த்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர். தொடர்ந்து கவுடா குடும்பத்துக்கு எதிராகச் செயல்பட்டவர். ஆனால் கடந்த நான்கு நாள்களாக பாஜகவினரின் ஆபரேஷன் கமல் இரண்டாம் பாகத்துக்கு ஆட்படாமல் காங்கிரஸ், மதச்சார்பற்ற எம்.எல்.ஏக்களைக் காப்பாற்றி... நேற்று தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராகப் பேருதவி புரிந்திருக்கிறார். விலாஸ்ராவ் தேஷ்முக், அகமது பட்டேல் ஆகியோரின் வெற்றிக்கு உதவிய சிவக்குமார் இப்போது குமாரசாமி கர்நாடக முதல்வர் ஆவதற்கும் பெரும் உதவி செய்திருக்கிறார்.

இதற்குப் பரிசாக குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி சிவக்குமாருக்குக் கொடுக்கப்படலாம் என்று செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. ஒருவேளை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டால் சிவக்குமாருக்குக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது ஆயிற்றே!

1 comment:

  1. Casino of the Day - Dr.MCD
    It's the perfect day for gambling. 의왕 출장샵 Experience Las Vegas' newest and best. Our first-of-its kind casino 군포 출장샵 hotel 동해 출장안마 is 평택 출장마사지 filled with tons of 경주 출장마사지 excitement for

    ReplyDelete