ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (மே 20) திருமணம் நடத்துவதற்குச் சிறந்த நாள் என்பதால் ஏழு திருமணங்களும் அதே நாளில் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சமூக நலத் துறையினர் மற்றும் குழந்தை நலக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சமூக நலத் துறை அலுவலர் குணசேகரி, உதவியாளர் பாண்டியன், குழந்தை நலக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் உட்பட அதிகாரிகள் திருமணம் நடப்பதாகத் தகவல் வந்த இடத்துக்கு குழுவாகப் பிரிந்து சென்றனர்.
அங்கு,பெற்றோரிடம் குழந்தைத் திருமணம் சட்ட விரோதமானது என்றும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களிடம் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைக்க மாட்டோம் என ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டனர்.
திருமணம் நடக்கவிருந்த ஏழு பேரில் ஐந்து மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பை முடித்தவர்கள் என்றும், இரண்டு பேர் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்குக் காத்துக்கொண்டிருப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
நடக்கவிருந்த குழந்தைத் திருமணங்கள்
சாத்தான்குளத்தில், 17 வயது மாணவி, கிளியூரைச் சேர்ந்த பாலமுருகன் (30)
பாம்பன் பகுதியில், 17 வயது மாணவி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (25)
முதுகுளத்துார், பேரையூர் அருகே புல்வாய்குளம் கிராமத்தில் 17 வயது மாணவி, அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி (25)
கடலாடி தேவர் நகர் பகுதியில் (15) வயது மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (30)
சாயல்குடி குருவாடி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜ் (25).
பார்த்திபனுார் அருகே கீழப்பெருங்கரையைச் சேர்ந்த, 15 வயது மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர்.
கமுதி அருகே சுந்தரராஜபுரம் பகுதியில், 17 வயது மாணவி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி (27).
இவர்களுக்கு நேற்று (மே 20) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பின்பு, போலீசார் உதவியுடன் குழந்தை நலக் குழுவினர் இந்தத் திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.
No comments:
Post a Comment