ஊடகங்களின் இத்தகைய போக்கைக் கையும் களவுமாகப் படம் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறது கோப்ராபோஸ்ட் ஊடகம்!
“இந்துத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தேர்தல் முடிவை பாஜகவுக்குச் சாதகமாகத் திருப்பப் பணம் வாங்கிக்கொண்டு உதவி செய்வீர்களா?” — தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் நிருபர் கேட்ட இந்தக் கேள்விக்கு இந்திய ஊடகங்களின் பெரும் புள்ளிகள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். கோப்ராபோஸ்ட் நடத்திய இந்த ‘ஸ்டிங்’ ஆபரேஷன் (உண்மைகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கை) பெருஊடக முதலாளிகளின் போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது.
வகுப்புவாதரீதியில் வாக்காளர்களைப் பிளவுபடுத்தி இந்துத்துவச் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பேரங்களுக்கு எவ்வாறு ஊடக நிறுவனங்கள் பலவும் தயாராக உள்ளன என கோப்ராபோஸ்ட் செய்தி இணையதளம் சுமார் இரு மாதங்களுக்கு முன்பு ரிப்போர்ட் செய்தது.
இப்போது இந்த இணைய தளம் இரண்டாம் தவணையாக வீடியோ பதிவுகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செய்திகளின் போர்வையில் இந்துத்துவப் பிரச்சாரங்களை (Advertorials) போட்டால் பணம் தருகிறோம் என்று ஆசைகாட்டியதற்கு உடன்பட்டு இந்தியாவின் மிகப்பெரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகிகளும் உடைமையாளர்களும் தலைகுப்புற விழுந்ததை மாறுவேடத்தில் சென்ற கோப்ராபோஸ்ட் நிருபர் ரகசியமாகப் படம்பிடித்திருக்கிறார்.
உரிய தொகை கொடுத்தால் வகுப்புவாத பேதத்தைத் தூண்டுவது மட்டுமல்ல, தேர்தல் முடிவையே ஒரு கட்சிக்கு ஆதரவாகத் திருப்புவதற்காகப் பணிபுரியத் தயார் என ஊடக நிறுவனங்கள் எவ்வாறு தயாராயின என்பதை இந்த கோப்ராபோஸ்ட் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
இந்த பேரத்துக்கு உடன்பட மறுத்தவர்கள் இரண்டே இரண்டு பேர். அவர்கள், வங்காளப் பத்திரிகைகளான வர்த்தமான்,தைனிக் ஜாக்ரண்ஆகியவற்றின் பிரதிநிதிகள்.
டைம்ஸ் குரூப்பின் உடையமையாளரான வினீத் ஜெயின் உள்பட பலர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை ரொக்கமாக, அதாவது கறுப்புப் பணமாக, வாங்கிக்கொள்ளும் விதம் குறித்து விவாதித்தது நிதியமைச்சகத்திலும் வருமான வரி இலாக்காவிலும் அபாய மணி அடித்திருக்க வேண்டும்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை உள்பட பல ஊடகங்கள் டைம்ஸ் குரூப்புக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணத்தை ஒழிக்க மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகவும் தேவை என ஆதரித்து இயக்கம் நடத்தியது சேனல் டைம்ஸ் நவ். பணத்தைக் கறுப்புப் பணமாக ரொக்கமாகக் கொடுத்தால் அதை மற்ற பிசினஸ் பேர்வழிகள் வாயிலாக வெள்ளையாக மாற்றிப் பெற்றுக்கொள்கிறேன் என்று இப்போது கூறுகிறார் இதன் உடைமையாளர் ஜெயின்.
எப்படி நடந்தது இந்த ஆபரேஷன்?
புஷ்ப் ஷர்மா என்ற நிருபரை மாறுவேடத்தில் ஆச்சார்யா அடல் என்ற போர்வையில் கோப்ராபோஸ்ட் அனுப்பியது. பெயர் குறிப்பிடப்படாத 'சங்கம்' ஒன்றின் பிரதிநிதி போலத் தன்னைக் காட்டிக்கொண்டு ஊடக உரிமையாளர்களையும் முக்கியப் புள்ளிகளையும் இவர் சந்தித்தார். ஆர்எஸ்எஸ் உறுப்பினராக அல்லது அந்த அமைப்புக்கு மிகவும் வேண்டப்பட்டவராகத் தன்னை இவர் காட்டிக்கொண்டார்.
பணம் பெற்றுக்கொண்டு தங்களது பத்திரிக்கைகள், ரேடியோ நிலையங்கள், தொலைக்காட்சி சேனல்கள், இணைய தளங்கள் ஆகியவற்றில் இந்துத்துவப் பிரச்சாரத்தை மேற்கொள்ள ஊடக நிறுவன நிர்வாகிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ‘ஆச்சார்யா அடல்’ அவர்களோடு மேற்கொண்ட பேரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளை கோப்ராபோஸ்ட் இணையதளம் யு டியூப் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பதிவுகள் இந்திய ஊடகங்களின் நேர்மையைப் பரிகசிப்பதாக அமைந்துள்ளன.
விலைபோன டைம்ஸ் குரூப்
கோப்ராபோஸ்ட்டினால் அம்பலப்படுத்தப்பட்டவர்களிலேயே மிகப் பெரும் புள்ளி டைம்ஸ் குரூப்பின் உடைமையாளரும் நிர்வாக இயக்குநருமான விநீத் ஜெயின்.
கிருஷ்ணரையும் பகவத் கீதையையும் பற்றிய நிகழ்ச்சிகள் / கட்டுரைகள் என்னும் போர்வையில் இந்துத்துவாவுக்கும் அதன் அரசியல் செயல்திட்டத்துக்கும் பரப்புரை செய்வதற்காக ரூ.500 கோடி ரூபாய் தருவதாக ஆச்சார்யா அடல் கூறினார். இது குறித்து அவர் ஜெயினுடனும் டைம்ஸ் குரூப்பின் நிர்வாகத் தலைவர் சஞ்சீவ் ஷாவுடனும் பேரம் பேசியது பல வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.
ரொக்கமாகப் பணம் கொடுத்தால் டைம்ஸ் குரூப்பிற்கு உபயோகம் ஏதும் இல்லை என்று ஜெயினும் ஷாவும் சொல்கிறார்கள். அதே சமயத்தில் ரொக்கத்தை எப்படிச் செலுத்துவது என வழிகாட்டவும் செய்கின்றனர். "பணத்தை சில பெரிய கார்பொரேட் நிறுவனங்களிடம் செலுத்தினால் அவர்கள் அதை சுத்தமாக வெள்ளைப் பணமாக மாற்றிவிடுவார்கள்" என்று சில பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டனர் என கோப்ராபோஸ்ட் தெரிவித்தது. "நீங்கள் அவர்களுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்தினால் அவர்கள் காசோலை வாயிலாக எங்களுக்குச் செலுத்துவார்கள்”, என வினீத் ஜெயின் கூறியது பதிவாகியிருக்கிறது. எந்த இடத்தில் யார் வாங்கிக்கொள்வார், எப்படி அது மாற்றப்படும் என்பதையெல்லாம் அவரது உதவியாளர் ஷா விளக்குகிறார்.
2017ஆம் ஆண்டில் டைம்ஸ் குரூப்பின் மொத்த வருவாயான ரூ. 9976 கோடியில் ரூ. 500 கோடி என்பது 5%க்கும் சற்று அதிகம்.
கல்லி பூரி (இண்டியா டுடே குரூப்)
இண்டியா டுடே குரூப்பின் துணைத் தலைவரான கல்லி பூரியுடன் நடந்த சந்திப்பில் கோப்ராபோஸ்ட் தலைமறைவு நிருபர், இதே திட்டத்தை முன்வைக்கிரார். ராமரும் அயோத்தியும் சர்ச்சைக்குள்ளாகிவிட்டபடியால் கிருஷ்ணரையும் பகவத் கீதையையும் பயன்படுத்த வேண்டும் என்கிறார். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்த வேண்டாமென கல்லி பூரி கேட்டுக்கொண்டார். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் இது தவிர்க்கப்பட முடியாது என அவர் பதில் கூறினார். கல்லி பூரியின் இந்த ஆட்சேபணையால் பேரம் முறியவில்லை.
இவற்றைப் பயன்படுத்தி அவர்களுடைய "கள நடவடிக்கைகளின்" பகுதியாக பரந்த மக்கள் மத்தியில் இந்துத்துவாவை கொண்டுசெல்ல இண்டியா டுடே க்ரூப் இதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனால் ஏற்படும் வகுப்புவாதப் பிளவுக்குத் தன்னைப் பொறுப்பாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். கல்லி பூரி இதற்கு ஒப்புக்கொள்வதாகக் கூறினார். ஆனால் உங்களுடைய நடவடிக்கை ஏதாவது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லையெனில் அதை நாங்கள் விமர்சனம் செய்வோம் என்று மட்டும் கூறினார்.
முன்னதாக கோப்ராபோஸ்ட் நிருபர் இண்டியா டுடே குரூப்பைச் சேர்ந்த டிவி டுடே சேனல் முதன்மை வருவாய் அதிகாரி ராகுல் குமார் ஷாவைச் சந்தித்தார். "நாங்கள் அரசாங்கத்திற்கு மிக மிக ஆதரவாளர்கள். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்" என்று கூறினார் குமார் ஷா. பின்னர் ரூ.275 கோடிக்கு ஒரு விளம்பர நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் திட்டத்தை முன்வைத்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். பெயருக்குத்தான் அது பகவத் கீதையை பரப்புவதற்கான தொகை. இந்துத்துவப் பிரச்சாரமே அதன் உள்ளீடு.
275 கோடி என்பது 2017இல் இண்டியா டுடே ஈட்டிய வருவாயில் 20%க்குச் சமம்.
(டைம்ஸ் ஆப் இந்தியா குரூப் முதலாளி வினீத் ஜெயின் மற்றும் இண்டியா டுடே முதலாளி அருண் பூரி மகள் கல்லி பூரி ஆகிய ஊடகப் பிரபலங்கள் விலைபோன கதையை இன்று பார்த்தோம். மேலும் 25 முக்கிய ஊடகப் பிரபலங்கள் விலைபோன சிலரின் கதையை நாளை பார்ப்போம்.)
நன்றி: தி வயர்
தமிழில்: பா.சிவராமன்
No comments:
Post a Comment