பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷாவுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் இடையில் நிலவும் கருத்து மோதலால், ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு கடந்த ஒன்றரை மாதங்களாகத் தலைவர் இல்லாத நிலை நிலவுகிறது.
அண்மையில் ராஜஸ்தானில் நடந்த மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக இருந்த அசோக் பர்னமி தனது பதவியை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ராஜினாமா செய்தார். இவர் முதல்வர் வசுந்தராவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அகில இந்தியத் தலைமையே இவரிடம் கட்டாய ராஜினாமா கடிதம் பெற்றதாகவும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில் காலியாக இருக்கும் மாநில பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தனது ஆதரவு வட்டத்தில் இருப்பவரையே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் முதல்வர் வசுந்தரா. ஆனால் அமித் ஷாவோ முதல்வருக்கு இணக்கமான ஒருவரை மாநில பாஜக தலைவராக நியமிக்க உடன்படவில்லை. இந்த கருத்து மோதலால் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் இன்று மே 28ஆம் தேதிவரை ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.
மத்திய அமைச்சரும் ஜோத்பூர் எம்.பியான கஜேந்திரா ஷேக்வாட்டை பாஜக தலைவராக்க அமித் ஷா விரும்பியபோது அவருக்கு முதல்வர் வசுந்தரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்னொரு மத்திய அமைச்சரான அர்ஜுன் மெஜ்வால் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட இருந்த நிலையில் அவருக்கும் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நியமனம் செய்யப்படவில்லை.
“மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி என்பது தனது ஆதரவாளரிடம் இருக்க முதல்வர் விரும்புகிறார். அப்போதுதான் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில்தான் செல்வாக்கு செலுத்த முடியும் என்று கருதுகிறார் வசுந்தரா. இதற்காகவே அவர் தனது ஆதரவாளரும் இப்போதைய மாநில அமைச்சருமான ஸ்ரீசந்த் கிரிப்லானியை மாநில பாஜக தலைவர் ஆக்குமாறு அகில இந்திய தலைமைக்கு பரிந்துரைத்தார்.
இவரிடம் மாநிலத் தலைவர் பதவி இருந்தால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு அதிகமாக சீட் வழங்க முடியும் என்று கணக்குப் போடுகிறார் முதல்வர் வசுந்தரா. ஆனால், இதை அமித் ஷா ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் ராஜஸ்தான் மாநிலத்துக்கு இன்னமும் மாநிலத் தலைவர் நியமிக்கப்படவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவில் தனிப்பட்ட செல்வாக்குடன் தலைவர்கள் வளர்வதில் அமித் ஷாவுக்கு விருப்பமில்லை. எல்லா லகானும் டெல்லியிடமே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அதன் விளைவுதான் விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கும் ராஜஸ்தான் போன்ற மாநிலத்துக்கு கூட தலைவர் பதவியை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவர் பதவியை உடனடியாக நியமித்த பாஜக தலைமை ராஜஸ்தான், ஆந்திரா இரு மாநிலங்களிலும் தலைவர்களை நியமிக்க யோசித்து வருகிறது. ஆந்திராவில் பாஜக அவ்வளவு வலிமையாக இல்லை. ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும் ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் அமித் ஷாவுக்குமான மோதல் முற்றி வருவதால் புதிய தலைவர் யார் என்ற கேள்வி நீடிக்கிறது.
No comments:
Post a Comment