Sunday, May 20, 2018

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ததை, “மேட்ச் தொடங்கும் முன்பே முடிவடைந்து விட்டது” என்று பாஜகவை விமர்சனம் செய்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.



கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 104 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கட்சிகள் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர், அதனடிப்படையில் 19 ஆம் தேதி 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவிட்டது உச்ச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விமர்சனம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக தேர்தலில் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியுடன் இணைந்து பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று (மே 19) தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மாநிலம் இனி காவிமயமாகாது. ஆனால், வண்ணமயமாக இருக்கும். மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டதே. 55 மணிநேரம் நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை பாஜக அரசு. நகைச்சுவை ஒருபக்கம் இருந்தாலும், கர்நாடக மக்களே இனிமேல் சேற்றை வாரி இறைக்கும் அரசியலைப் பார்க்கத் தயாராக இருங்கள். நான் தொடர்ந்து மக்களின் பக்கமே இருப்பேன், தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment